கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை:
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.28.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், கொளத்தூர் நவீன அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம், 2 நியாயவிலைக் கடைகளுடன் கூடிய பல்நோக்கு மையக் கட்டிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பல்வேறு கழிவுநீர் உந்து நிலையங்களில் ரூ.12.48 கோடியில் மின்னியல், இயந்திரவியல், கட்டிடக் கட்டமைப்புகளை மேம்படுத்தி, வலுப்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பல்லவன் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3,200 முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் ‘டேலி’ பயின்ற, 53 மாணவிகள், 32 மாணவர்களுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களையும், தையல் பயிற்சி முடித்த 320 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், சான்றிதழ்களையும் வழங்கினார்.

கலைஞர் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்துகொண்ட 200 பேருக்கு கண் கண்ணாடிகள், புத்தாடைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *