தமிழகத்தில் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்றமும், சறுக்கலும் – தவெக 35%, திமுக 24%, அதிமுக 21% !!

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்றது.

இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது.

தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் அதன் சதவீதம் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தத் தேர்தலில் தவெக போட்டியிட்ட 233 இடங்களில் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மொத்தமாக ஒரு கோடியே 72 லட்சத்து 26,209 (34.92%) வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, திமுக 176 இடங்களில் போட்டியிட்டு 59 இடங்களை வென்றுள்ளது.

இந்த கட்சி ஒரு கோடியே 19 லட்சத்து 29,144 (24.19%) வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

அதேபோல், மொத்தம் 172 இடங்களில் களம் கண்ட அதிமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி ஒரு கோடியே 4 லட்சத்து 62,146 (21.21%) வாக்குகள் பெற்றுள்ளது.

இதுதவிர, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியுடன், 19 லட்சத்து 72,537 (4%) வாக்குகளைப் பெற்றது.

அதேபோல், தேசிய கட்சிகளான காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வென்றது. இதன் வாக்கு விகிதம் 3.37 சதவீதமாகும். பாஜக 33 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

இக்கட்சி 2.97 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுதவிர, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 2 இடங்களிலும் (0.29%) வெற்றி பெற்றது.

தேமுதிக 10-ல் போட்டியிட்டு ஓரிடத்தில் (1.20%) வென்றது. இந்திய கம்யூ. கட்சி 5-ல் போட்டியிட்டு 2 (0.66%) இடங்களிலும், மார்க்சிஸ்ட் 5-ல் போட்டியிட்டு 2 இடங்களிலும் (0.60%) வெற்றி பெற்றுள்ளன.

இதுதவிர, பாமக 18 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றது. இதன் வாக்கு விகிதம் 2.37 சதவீதமாகும்.

விசிக 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை ((1.09%) கைப்பற்றியுள்ளது. அமமுக 11 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் (0.86%) மட்டுமே வென்றுள்ளது.

மேலும், 234 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு ஒரு லட்சத்து 99,801 (0.41%) வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், இந்த தரவுகளை 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது இந்த முறை அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வாக்கு வங்கி சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *