இனி வரும் காலத்தில் தமிழக அரசியல் களம் அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும் – அமர்பிரசாத் ரெட்டி!!

சென்னை:
பாஜகவில் இருந்து விலகிய அமர்பிரசாத் ரெட்டி, “இனி வரும் காலத்தில் தமிழக அரசியல் களம் அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும்” என்று கூறினார்.

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கடந்த 2013-ம் ஆண்டு 200 இளைஞர்களுடன் பாஜகவில் இணைந்தேன்.

அண்ணாமலை தலைவரான பிறகு, விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவை உருவாக்கி நூற்றுக்கணக்கான இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வந்தேன். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையைத் திட்டமிடுவதில் இருந்து, அது வெற்றி பெறுவது வரை முன்னின்று உழைத்தேன்.

பிரதமரின் படத்தை ஒட்டியதற்காக சிறை சென்றேன். கட்சி கொடியைக் காக்கப் போராடி பல வழக்குகளைச் சந்தித்துள்ளேன்.

ஆனால், கடந்த ஓராண்டாக கட்சியின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த வேதனையை அளித்தன.

முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் தேர்தல்களில் தோல்வியடைந்த போதும், அவர்களுக்கு ஆளுநர் பதவி மற்றும் மத்திய அமைச்சர் பதவி வழங்கி அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்றபோது 3 சதவீதமாக இருந்த வாக்கு வங்கியை 12 சதவீதமாக உயர்த்தினார்.

ஆனால், ஒரு கூட்டணிக்காக அண்ணாமலையை ஒரே இரவில், அதுவும் ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து, அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனை நியமித்தனர்.

12 சதவீத வாக்கு வங்கி கொண்ட கட்சிக்கு வெறும் 27 தொகுதிகளை மட்டும் பெற்று, கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளனர்.

ஆனால், கட்சிக்காக உழைத்த அண்ணாமலைக்கு அங்கீகாரம் வழங்காதது ஏன்? தமிழகத்தில் இருந்து துடிப்பான இளம் ரத்தம், அறிவாற்றல் மிக்கவர் வருவது பாஜகவில் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதே காரணம்.

திமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்.

ஆனால், தமிழக பாஜகவும் ஒரு நான்கு பேர் கொண்ட குழுவின் கையில் தான் சிக்கியுள்ளது. உண்மையில், பாஜகவும் திமுகவும் ஒன்றுதான்.

தோற்றவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் ஏதோ ஒரு லாபம் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

சொந்த காசை செலவு செய்து உழைக்கும் தொண்டர்களுக்கு இங்கு மரியாதை இல்லை.

தொண்டர்களின் தன்மானத்தைக் கூடக் காப்பாற்ற முடியாத சூழலில் தமிழக பாஜக இருக்கிறது. இனி வரும் காலத்தில் தமிழக அரசியல் களம் அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *