ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக் கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா!!

ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக் கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடக்கும்.

ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள்.

தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.

அம்பாளுக்கான விழா ஆகையால் 9-ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது.

ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி

11-ம் நாள் காலையில் யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடக்கிறது.

தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

ஆடி பவுர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக, தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார்.

பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

சங்கரன்கோவில் முக்கிய தகவல்கள்

இறைவன் : ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி.

இறைவி : ஸ்ரீ கோமதி அம்பிகை (வேறு பெயர்கள் : சங்கரி, ஆவுடைய நாயகி, மனோன்மணி, வாளைகுமாரி மற்றும் மகாயோகினி)

உற்சவர் : ஸ்ரீ உமா மகேஸ்வரர்.

விநாயகர் : சித்தி விநாயகர், சர்ப்ப விநாயகர், புன்னைவன விநாயகர்.

முருகர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சஹித ஸ்ரீ ஷண்முகர்.

பைரவர் : மகா கால சர்ப்ப பைரவர் (கையில் பாம்பு வைத்திருப்பார்)

தல துர்க்கை : ஸ்ரீ விஷ்ணு துர்க்கை (தெற்கு நோக்கி வீற்றிருப்பார்)

தீர்த்தம் : நாக சுனை தீர்த்தம், சங்கர தீர்த்தம், கவுரி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்

(அம்பிகையின் அபிஷேக தொட்டி)

தல விருட்சம் : புன்னை மரம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *