சென்னை:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான(2026-27) பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று கூடியது. காலை 10 மணிக்கு பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றி வருகிறார்.
நிதிநிலையில் அறிக்கையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் வெளியான அறிவிப்புகள் விவரம்: கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் வெற்றி மடிக்கணிணி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பொது நூலங்களை டிஜிட்டல் நூலகங்களாக உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ரூ.3.38 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
மாணவர் தங்கும் விடுதிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 12 லட்சம் கல்லூரி மாணவர்கள். ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழி திறன் பயிற்சி வழங்கப்படும். 11ம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில்கள் கொண்ட நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.277 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப்பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.90 கோடி நிதியில் 5 தொழிற் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும். பள்ளி பாடத்திட்டத்தை சீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படும்.
மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கையுடன் சட்டக்கல்லூரி அமைக்கப்படும். வெற்றி திறன் பயிற்சி திட்டத்துக்கு ரூ.150 நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப்பள்ளிகள் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு சுடர் திட்டத்துக்கு ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கப்படும். பள்ளி நேரம் முடிந்ததும் விளையாட்டுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும்.
பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க 1058 என்ற கட்டணமில்லா எண் அறிமுகம் செய்யப்படும். போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பை உருவாக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மொத்தமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.