சென்னை:
‘20 ஆயிரம் ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டில் மண்வள பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் வெளியான அறிவிப்புகள்:
மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ரசாயன உரங்களை பயன்பாட்டை குறைத்தல், இயற்கை உயிர்ம வேளாண் முறைகளை ஊக்குவித்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வளமான மண்ணை உருவாக்க தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்தாண்டு திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
மண் வளத்தை அறிந்து சமச்சீர் உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 4 கோடி நிதியில் மண்வள அட்டைகள் வழங்கப்படும்.
உழவர் அடையாள எண் பெற்ற சுமார் மூன்று லட்சம் விவசாயிகளுக்கு மண்நல அட்டைகள் ஒன்றிய, மாநில அரசின் நிதித் திட்டத்தில் ரூ.6.16 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
மண்வளத்தை மீட்டெடுக்க ஒரு லட்சம் ஏக்கர் பசுந்தாள் விதைகள் வழங்குவதுடன், 22,000 ஏக்கருக்கு தேவையான பல்வகை தானிய விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுவதுடன், பசுந்தழைகளை நிலத்தில் மடக்கி உழவு செய்திட ஏக்கருக்கு 3000 ரூபாய் உழவுமானியம் வழங்கப்படும் .இதற்கான 63 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க திரவ உயிர் உரங்கள் ரூ.4.50 கோடியிலும், பயிர் ஊக்கிகள் 12 கோடி 38 லட்சம் ரூபாய் செலவிலும் விநியோகிக்கப்படும்.
20 ஆயிரம் ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நிரந்தர மண்புழு உர கூடங்கள் அமைக்க உங்கள் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
உயிர்ம விவசாயிகளுக்கு உயிர்ம வாய்ப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.
வளம் குறைந்த மண்ணை தேர்ந்தெடுத்து சீர்திருத்தம் செய்ய செயல்விளக்கம் மேற்கொள்ள இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் 122 கோடி 51 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
விதை பண்ணைகள் அமைத்து 7,730 மெட்ரிக் சான்று நெல் விதை உற்பத்தி செய்து தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு நெல் விதை உற்பத்தி மானியமும், 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகளை மானியத்தில் விநியோகிக்க நெல் விதை விநியோகம் மானியமும் வழங்குவதற்கு 34 கோடியே 72 லட்சம் ரூபாய் மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் .