சென்னை:
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் வீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் டாக்டர் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியர் வழக்கறிஞர் இ.கோகுலகிருஷ்ணன் – ஜி.ஜெயந்தி. இவர்கள் அப்பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான வீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத்துக்கு தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தங்களது வீட்டை முறைப்படி
பத்திரப் பதிவு செய்து, சொத்து தொடர்பான ஆவணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் நேற்று ஒப்படைத்தார்.
குடும்பச் சொத்தை கட்சிப் பணிக்காக வழங்கிய தம்பதியருக்கு பெ.சண்முகம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா சால்வை அணிவித்து கவுரவித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருவேட்டை, மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தரம்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.