சென்னை:
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம், ‘சர்தார் 2’. இதில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எஸ்.லக் ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படம் செப். 10-ல் வெளியாகிறது. இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சின்னி ஜெயந்த், எஸ். ஜே.சூர்யா, நாசர், கவின், ரவி மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது: தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது.
நான் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது, தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களைக் காண்பித்தாலும் தமிழ்ப்படம் என்று காண்பிக்கும் போது, அந்த திரைப்படத்துக்கு என தனி கலர் உண்டு.
அதில் நடிகர்களின் நடிப்பை பார்ப்பார்கள், நடனத்தை கவனிப்பார்கள், சண்டைக் காட்சிகளை ரசிப்பார்கள். பிறகு கிண்டலும் செய்வார்கள்.
பாராட்டவும் செய்வார்கள். கிண்டல் செய்யும்போது, இவர்கள் பாராட்டும் வகையில் ஒரு படத்தை வழங்க வேண்டும் என ஆசையாக இருக்கும்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம்.
இந்தப் படத்தைப் பார்த்து பிறகு இந்தப் படம் சொல்லும் விஷயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது.
ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையை இதில் சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விஷயம்.
ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அதை இந்தப் படத்தில் இயக்குநர் மித்ரன் செய்திருக்கிறார்.
படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும். இவ்வாறு கார்த்தி பேசினார்.