ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை ; உயிர் தப்பிய தம்பதி!!

பழநி:
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானை வீட்டை சேதப்படுத்தியது. அங்கு வசித்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஒட்டன்சத்திரம் வனப் பகுதியையொட்டி அமைந் துள்ள பரப்பலாறு அணை, பெத்தேல்புரம், வடகாடு, புலிக் குத்திக்காடு ஆகிய மலைக் கிராமங்களில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

இந்த யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீருக்காக பரப்பலாறு அணை பகுதி, வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களுக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களாக மலைக்கிராமங்களில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பெத்தேல்புரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உணவு தேடி நுழைந்த ஒற்றை யானை, குபேந்திரன் – ஜீவரத்தினம் தம்பதியின் வீட்டின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தியது.

சத்தம் கேட்டு வெளியே வந்த தம்பதி, வீட்டு வாசலில் யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். யானையை பார்த்து கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்றுவிட்டது.

தகவலறிந்து நேற்று காலை அங்கு சென்ற ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதி அருகே சுற்றித் திரியும் யானையை தொடர்ந்து கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *