சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவெ கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இன்று சோதனை நடத்தப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் திருச்சியில் கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெறும் தகவலறிந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட முன்னணி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கே.என்.நேருவின் வீட்டின் முன்பாக குவிந்து வருவதால் திருச்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்தங்களில் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) வசூல் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்த குற்றச் சாட்டுகளின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.