சென்னை:
செப்.15-ம் தேதி தொடங்கவிருந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் தள்ளிப்போவதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் அருண்ராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் பற்றி கேள்வி எழுப்பியபோது, “நீங்கள் நினைப்பதுபோல், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப்போகிறது.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போகிறது.
நீங்கள் ஊகிப்பதுபோல் உசிலம்பட்டியில் தான் அத்திட்டம் தொடங்கப்படும். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம்,” என்றார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தவெக அறிவித்திருந்தது.
அதன்படி, ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார்.
இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், செப். 25-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் அருண்ராஜ் பேட்டியளித்துள்ளார்.
மேலும் அமைச்சர் பேசுகையில், “தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வழங்கப்பட உள்ள தங்கத்தில் எவ்வித குறையும் இருக்காது.
916 தங்கம் தானா என முறையாக சோதனை செய்த பின்னரே தங்க மோதிரம் திட்டத்துக்கு தங்கம் அனுப்பப்படும். மோதிரத்தின் தரத்தை பயனாளர்களும் சோதனை செய்து கொள்ளலாம்” என்றார்.
அதேபோல், எலும்பு மஜ்ஜை, ஸ்டெம் செல் தானத்தையும் ஊக்குவித்துப் பேசினார்.
“நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை தேவை அதிகளவில் இருப்பதால் எலும்பு மஜ்ஜை (போன் மாரோ – Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும்.
ரத்த தானம், கண் தானம்போல் ஸ்டெம்செல் தானத்துக்கான முன்பதிவும் தொடங்கப்பட உள்ளது” என்றார்.