சென்னை
தே.மு.தி.க.வை கண்டு திருமாவளவன் பயப்படுகிறாரா எனவும், அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணி மாறிவிட்டார்கள் எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்கவிழா கடந்த 14-ந்தேதி நடைபெற்றது.
விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்ததுடன், விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க., இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம்.
மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம். உங்களுடைய ஆதரவு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் உங்களுக்கு இருக்கும் என நான் தெரிவித்தேன்.
இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் தி.மு.க.வுக்கு முழு ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.
தொடர்ந்து பிரேமலதா கூறுகையில், தி.மு.க.வில் தொடர்ந்து கூட்டணியில் இருந்த எங்களுக்கு தொகுதியை குறைத்து விட்டு, புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு அதிகமான தொகுதி (சீட்) ஒதுக்கப்பட்டது என திருமாவளவன் கூறிய கருத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பதிலை கூறுகிறேன் என்றார்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும்.
விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்பின்னர், பிரேமலதா நிருபர்களிடம் கூறும்போது, மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட திருமாவளவன், தற்போது தே.மு.தி.க.வுக்கு 10 சீட்டு கொடுத்ததால்தான் கூட்டணியை விட்டு செல்கிறோம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.
தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது எனக்காக திருமாவள வனும், கனிமொழியும் மட்டுமே பிரசாரம் செய்தனர்.
தற்போது ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வேறொரு கூட்டணிக்கு திருமாவளவன் சென்றுவிட்டார்.
கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போல, நீங்களும் வெளியில் இருந்து ஆதரவு அளித்திருக்கலாமே?. நீங்கள் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது தவறு.
பல கட்சிகள் இருக்கும் நிலையில், தே.மு.தி.க. மீது மட்டும் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?. தே.மு.தி.க.வை கண்டு என்ன பயம்? எங்களால்தான் நீங்கள் கூட்டணியை விட்டு சென்றீர்கள் என்பது உண்மைக்கு புறம்பான பதில் என மக்களுக்கு தெரியும் என அவர் கூறினார்.