சென்னை:
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக, ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.
இவர் ‘தேசிய தலைவர்’ என்ற படத்தில் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர்.
தனது நடிப்பாலும் மனிதநேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற பெயரில் கட்சித் தொடங்கி, தேர்தல் அரசியலில் களம் கண்டார்.
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று, தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.
திரைப்படம், அரசியல், மக்கள் சேவை என பல்வேறு தளங்களில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இன்றும் தலைமுறைகளைத் தாண்டி பேசப்படும் ஒன்றாக உள்ளது.
இந்த திரைப்படம் வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல், எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி, அவருடன் பயணித்தவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அவரது ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், சக நடிகர்–நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோரின் நேரடி அனுபவங்களையும் நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய அக். 17-ம் தேதி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தில், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில்இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்– நடிகைகள் உள்ளிட்ட முக்கிய திரைப்படக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.