வருசநாடு:
வன வெளியேற்ற நடவடிக்கையை கண்டித்து வருசநாடு மலைவாழ் மக்கள் 4-ம் நாளாக இன்று (செவ்வாய்) பெருந்திரள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாவட்ட எஸ்பி.பிரவீன் கவுதம் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார்.

இன்று பிற்பகலில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால் மலைவாழ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சார்ந்த கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா், ஆகிய வனச்சரக ங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மே 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்தது.
இதன்படி கண்டமனூர், மேகமலை, வருசநாடு, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஶ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள 5073 ஹெக்டேர் நிலப்பரப்பை 4601 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் தேவைப்பட்டால் அவர்களை துணை ராணுவம் மூலம் வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்) நடைபெறுவதை ஒட்டி மலைக்கிராம மக்கள் ஒருங்கிணைந்து கடந்த 26-ம் தேதி முதல் கடமலைக்குண்டுவில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை ஒட்டி போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன.
கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாவட்ட எஸ்பி.பிரவீன்கவுதம் அப்பகுதியை ஆய்வு செய்தார். போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து சுற்றுப்பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகலில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.
இதனால் மலைக்கிராம மக்கள் போராட்டக் களத்தில் இருந்தபடி ஆர்வமுடன் இதனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விசாரணையின் தன்மைக்கு ஏற்பட்ட போராட்டத்தின் தன்மை இருக்கும் என்று மலைக்கிராம மக்கள் தெரிவித்தனர்.