சென்னை:
ஆதார் என்பது இந்தியாவில் தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறியுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது முதல் நலத்திட்ட உதவிகள் பெறுவது வரை அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டே பிரதானமாக கேட்கப்படுகிறது.
ஆதார் சேவைகளை மக்கள் எளிதாக பல்வேறு புதிய வசதிகளை ஆதார் ஆணையம் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் ஆதார் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில், முக அடையாளம் மூலம் சரிபார்ப்பு ஆதார் உள்ளிட்ட 5 புதிய திட்டங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிமுகப்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற 17-வது ஆதார் தினத்தை முன்னிட்டு யுஐடிஏஐ சார்பில் ‘ஆதார் சம்வாத்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆதார் சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய வசதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இ-பிடிஎஸ். எனப்படும் மின்னணு பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவோர், இனி விரல் ரேகைக்கு பதிலாக முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
ஆதார் சரிபார்ப்பு சேவையைப் பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள் அதற்கான அனுமதியைப் பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் ‘ஸ்விக் போர்ட்டல் 2.0’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான சேவைகளுக்காக யுஐடிஏஐ-யின் மாநில மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களின் வருகையை நிர்வகிக்கும் வகையில் புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அலுவலகங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் குறையும்.
குறைந்த எண்ணிக்கையிலான ஆதார் சரிபார்ப்புகள் மட்டுமே தேவைப்படும் அரசு மற்றும் தகுதி பெற்ற அரசு சாரா நிறுவனங்களுக்காக துணை தளங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
ஆதார் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில், யுஐடிஏஐ இணையதளமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் சேவைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாகப் பெற முடியும்.