உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்!!

அரியலூர்:
செப்டிக் டேங்க் சென்ட்ரிங் பலகை அகற்றச் சென்று உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இறந்தவர்களின் உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.

செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே, சுப்பிரமணியன் என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த செப்டிக் டேங்க் கட்டுமான சென்ட்ரிங் பலகை அகற்றும் பணியில் அக்.2-ம் தேதி ஈடுபட்ட தொழிலாளர்களான திருவாரூரை சேர்ந்த பாஸ்கரன், தினகரன் மற்றும் அரியலூ ரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் மீட்டு 108 வாகன மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு மயக்கமடைந்த தொழிலாளர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து இழப்பீடு, அரசு வேலை, குழந்தைகளின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

அப்போது அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3 தொழிலாளர்கள் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்தும் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற தடை என்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலா ரூ.30 லட்சம் இழப்பீடு மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களது குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மிருணாளினி, எஸ்பி செல்வகுமார் தலைமையில் நேற்று இரவு 10 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. இதில் உரிய முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள், ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அரியலூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *