மதுரை:
அனைத்து ரயில் நிலையங்களிலும் 6 மாதங்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பேட்டரி கார் சேவை தொடக்கத்தில் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டு முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவை மதுரை ரயில் நிலையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை மற்றும் திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள 251 ரயில் நிலையங்களில் வெறும் 11 ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த பேட்டரி கார் சேவை உள்ளது.
ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கைகளின்படி, மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு பேட்டரி கார் சேவையை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
எனவே, திருச்சி ரயில் நிலையத்திலும் இலவச பேட்டரி கார் சேவையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், அனைத்து ரயில் நிலையங்களிலும் 6 மாதங்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.