புதுடெல்லி:
பஞ்சாபில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் கடந்த 1996-ம் ஆண்டில் கூட்டணி அமைத்தன. இரு கட்சிகளும் இணைந்து கடந்த 1997, 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் பஞ்சாபில் கூட்டணி ஆட்சியை நடத்தின.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் அகாலிதளம் இடம் பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக இரு கட்சிகளின் 24 ஆண்டு கால கூட்டணி முறிந்தது.
இந்த சூழலில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவும் அகாலிதளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: பாஜக கூட்டணியில் அகாலிதளம் மிக நீண்ட காலம் நீடித்தது. சந்தர்ப்ப சூழல் காரணமாக கூட்டணி உடைந்தது. தற்போது நாங்கள் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளோம்.
போதைப் பொருளை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை முன்னிறுத்தி கடந்த 2017-ம் ஆண்டில் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
இதே வாக்குறுதியை முன்னிறுத்தி கடந்த 2022-ம் ஆண்டில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இரு கட்சிகளின் ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் ஒழிக்கப்படவில்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிரோமணி அகாலிதளம் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
எங்களது ஆட்சியில் வரும் 2029-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் போதைப் பொருள் இல்லாத பஞ்சாப் உருவாக்கப்படும்.
சட்டம், ஒழுங்கும் சீர்படுத்தப்படும். பஞ்சாப் பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் சுக்பீர் சிங் பாதல் முதல்வராகப் பதவியேற்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அகாலிதளம் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்கையான கூட்டணி.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அகாலிதளம் கூட்டணி வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.