உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போட்டியிடாது; எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது !! அபிஜித் தீப்கே

புதுடெல்லி:
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போட்டியிடாது என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி, மீண்டும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் தொடர் போராட்டங்களை நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அதில் வெற்றியும் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் சிஜேபி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது.

இத்தகைய போராட்டங்களின் மூலம், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்த சிஜேபி, எதிர்க்கட்சிகளுடன் நெருக்கம் காட்டி வந்தது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிஜேபி போட்டியிடாது என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்றும் அதன் ஒருங்கிணைப்பாளரான அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, “நாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயல்பட மாட்டோம்.

தேர்தல்கள் இளைஞர்களின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற வேண்டும். சாதி, மதத்தின் பெயரால் இன்னும் எவ்வளவு காலம் நாம் தேர்தல்களைச் சந்திக்கப் போகிறோம்? உலகம் இன்று செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறது.

யார் ஆட்சி அமைக்க வேண்டும், யார் அமைக்கக்கூடாது என்பது குறித்து நாங்கள் பேசப்போவதில்லை.

தேசிய அரசியல் என்பது வேலைவாய்ப்பு மற்றும் தரமான கல்வியில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *