14 வயதுடைய சிறுமிகளுக்கு, அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன், அரசு சுகாதார மையங்களில் ஒற்றை டோஸ் ஹெச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது – பிரதமர் மோடி!!

புது டெல்லி:
தேசிய ஹெச்பிவி தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். “இந்தியாவின் நோய்த்தடுப்பு சுகாதார முயற்சிகளில் இது ஒரு முக்கிய மைல்கல். இம்முயற்சி இளம் பெண்களை கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘நமது நோய்த் தடுப்பு சுகாதார முயற்சிகளில் இது ஒரு முக்கிய மைல்கல்.

ஒவ்வொரு தடுப்பூசியும் சிறுமிகளை கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் ஒரு படியாகும். இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய அனைத்துத் தரப்பினரின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக தகவல்படி, பிப்ரவரி 2026-ல் தேசிய அளவிலான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்குள்ளேயே, இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் கீழ், 14 வயதுடைய சிறுமிகளுக்கு, அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன், அரசு சுகாதார மையங்களில் ஒற்றை டோஸ் ஹெச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 1.2 கோடி சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் தற்போது சுமார் 87 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட தேசிய ஹெச்பிவி தடுப்பூசி பிரச்சாரம், ஒன்பது மாதங்களுக்குள்ளேயே இந்தியாவின் சிறுமிகளை கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இதில் குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்கள் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன.

மேலும் 12 மாநிலங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கை எட்டியுள்ளன; அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 76.12 சதவீதம் பேருக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *