மின்சார கட்டணம் செலுத்தவும், பராமரிக்கவும் நிதியில்லாமல் தள்ளாடும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!!

மதுரை: மின்சார கட்டணம் செலுத்தவும், பராமரிக்க வும் நிதியில்லாமல் திணறுவதால், திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க, மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ வீர விளை யாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், இங்கெல்லாம் கேலரிகள் உள்ளிட்ட போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பெரும்பாலான பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கு 66 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இதற்காக கடந்த திமுக ஆட்சியில் ரூ.64 கோடி நிதி ஒதுக்கி, இந்த அரங்கம் கட்டி திறக்கப்பட்டது.

இதற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு ஜன. 24-ல் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைத்தார்.

இங்கு ஒரு நாள் ஜல்லிக்கட்டு, பிற தனியார் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்வைப்புத் தொகை, மின்சார கட்டணம், வரிகள் சேர்த்து ரூ.60 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்படுகிறது.

ஆரம்பத்தில் சில தனியார் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு வசதிகள் இல்லாததோடு மலையடிவாரத்தில் நகர்ப்பகுதியிலிருந்து மிக தொலைவில் இந்த அரங்கம் அமைந்துள்ளதால் நிகழ்ச்சிகள் நடத்த யாரும் முன்வரவில்லை.

பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளும், மே மாதத்துடன் நிறைவு பெற்றன. இதுவரை இந்த ஆண்டில் 17 நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளதால் வருவாய் இல்லாமல் சுற்றுலாத்துறையால் ஜல்லிக்கட்டு அரங்கை பராமரிக்க முடியவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக மின்சாரக் கட்டணம்கூட செலுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால், சுற்றுலாத் துறை வணிகரீதியாக ஜல்லிக்கட்டு அரங்கை பொழுதுபோக்காக மாற்றி பார்வையாளர்கள் வருகையை அதிகரித்து, வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது. அதற்காக மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்கி உள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஜல்லிக்கட்டு அரங்குக்கு பார்வையாளர்கள் இலவச மாக அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் மாதம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்தாலும் வருவாய் இல்லை. ஜல்லிக்கட்டு அரங்கை பராமரிக்க நிதி, ஊழியர் சம்பளம் போன்ற வற்றுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை.

2 மாதங்களுக்கு ஒருமுறை ஜல்லிக்கட்டு அரங்குக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

இந்த கட்டணத்தை செலுத்துமாறு தமிழ் நாடு மின் வாரியம் கடிதம் அனுப்புகிறது. அதற்கு பதில் சொல்ல முடியாமலும், மின்சார கட்டணமும் செலுத்த முடியா மலும் சுற்றுலாத் துறை தவிக்கிறது.

இதனால், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைத்தால் அவர்கள் வணிகரீதியாக ஜல்லிக்கட்டு அரங்கில் கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி கட்டண அடிப்படையில் பார்வையாளர்களை வரவழைத்து, வருவாயை அதிகரிக்க ஏற்பாடு செய்வர்.

இதனால் நாங்கள் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க பரிந்துரை செய்து விட்டோம். முடிவு, தமிழக அரசின் கையில்தான் உள்ளது, என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *