முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க உத்தரவு; அதிகாரி களுக்கு அமைச்சர் ஆனந்த் உத்தரவு !!

திருச்சி:
முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 2022-ம் ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, முக்கொம்பு மேலணையில் அமைந்துள்ள காவிரி கதவணை பலத்த சேதமடைந்தது.

இதனை சீரமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதையடுத்து, நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது, முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

இன்று முக்கொம்பு மேலணைக்கு நேரில் சென்ற அமைச்சர் ஆனந்த், வெள்ளப்பெருக்கின்போது சேதமடைந்த காவிரி கதவணையை பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலை மற்றும் புனரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், காவிரி கதவணையை புனரமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கும் வகையில், இன்னும் 15 தினங்களுக்குள் உரிய அரசாணை பெற்று பணிகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

காவிரி ஆற்றின் நீர்மேலாண்மை, அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காவிரி கதவணை புனரமைப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்திட தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *