தமிழகத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவுடன் அமைச்சர் நிர்மல்குமார் ஆலோசனை!!

சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினர், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து சிறைகளில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

இக்குழுவில் சிறைத் துறை டிஜிபி கே.சங்கர், ஓய்வுபெற்ற டிஐஜி எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு, தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெற்ற கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கான காரணங்கள், சிறைகளில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகள், பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை, உயர்நிலைக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சிறைத் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், குறைபாடுகளைக் களைவது மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், சிறைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகள், கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *