திருநெல்வேலி:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பினார்.
பின்னர் மாலையில் இயற்கை உபாதை கழிக்க காட்டுப் பகுதிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து புகார் அளிக்கச் சென்ற அவரது பெற்றோரை, குளத்தூர் காவல் நிலையத்தினர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பினர்.
ஆனால், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பிரவீனா மற்றும் போலீஸார், மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு மாணவியின் பெற்றோரை திருப்பி அனுப்பி அலைக்கழித்துள்ளனர்.
மறுநாள் மாலையில், அங்குள்ள காட்டுப் பகுதியில் மாணவி பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில், கடந்த மே 25-ம் தேதி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் காவல்துறையின் அலட்சியம் குறித்து, திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு விசாரணை மேற்கொண்டார்.
இன்ஸ்பெக்டர் பிரவீனா கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்பெக்டர் பிரவீனா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, அவருக்கு கட்டாயபணி ஓய்வு அளித்து டிஐஜி திருநாவுக்கரசு தற்போது உத்தரவிட்டுள்ளார்.