சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த சீசனில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை கடை பிடித்து இருமுடி கட்டி வந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

சபரிமலை கோவில்

இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

சீசன் தொடக்கம்

கோவிலில் நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். சீசன் தொடக்கம் முதல் தினமும் 18 மணி நேர தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனத்துக்கான விரிவான முன்னேற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்துள்ளது. இந்த சீசனில் நிலக்கல், எருமேலியில் ஒரே நேரத்தில் 14 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்.

சுக்குநீர் வினியோகம்

சபரிமலையில் மரக்கூட்டம் முதல் வலிய நடை பந்தல் வரை பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடங்களில் தடுப்பு கம்பிகள் வழியாக குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சரம் குத்தி முதல் சன்னிதானம் வரை 60 இடங்களில் சுக்குநீர் வினியோகம் 24 மணி நேரமும் நடைபெறும். சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பம்பையில், 3 ஆயிரம் ஸ்டீல் பாட்டில்களில் சுடுநீர் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

தற்காலிக கழிப்பறை வசதி

பம்பை முதல் சன்னிதானம் வரை 8 இடங்களில் 16 ஆயிரம் பேர் ஓய்வெடுக்க நிரந்தர பந்தல்கள் உள்பட 8 பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 3,000 தற்காலிக கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த சீசனில் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக இதுவரை 50 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தினமும் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி

சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

சபரிமலைக்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *