பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சம்பத்குமார்!!

கோவை:
“பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.6) நடைபெற்ற அரசு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளன.

இது குறித்து அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையின் முடிவில் முறைகேடு நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான சைக்கிள் வழங்க வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை. மாணவ, மாணவிகள் விரும்பும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நல்ல தரமான, உறுதித் தன்மை கொண்ட சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தை தகுதி வாய்ந்த நிறுவனத்துக்கு வழங்குவதுதான் உரிய நடைமுறை. பல்வேறு ஆன்லைன் இணைய தளங்களில் விற்பனை ஆகாத பிராண்ட் சைக்கிள்களை கூட விலை குறைத்து காட்டுவார்கள்.

ஆனால், தற்போதைய நிலையில் தராமான சைக்கிள் அதுவும், கடந்த ஆண்டு வாங்கிய விலையை விட குறைந்த விலையில் தான் வாங்க உள்ளோம். அதில் உறுதியாக உள்ளோம்.

கோவையில் பெருகி வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு முக்கிய இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பொது மக்கள் சாலைகளை கடக்க நடைபாதை மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்கும் திட்டமும் உள்ளது” என்று அமைச்சர் சம்பத்குமார் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *