திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் இன்று காலை கடல் சுமார் 100 மீட்டர் உள்வாங்கியதால் பரபரப்பு!!

தூத்துக்குடி:
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் இன்று காலை கடல் சுமார் 100 மீட்டர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பருவநிலை மாற்றம் காரணமாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்புள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் நீர் உள்வாங்குவதும் பின்பு சகஜ நிலைக்கு திரும்புவதும் நடைபெற்று வருகிறது. அதுபோல அவ்வப்போது கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தை ஒட்டிய முந்தைய மற்றும் பிந்தைய சில நாட்கள் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை இந்த கடற்கரை பகுதியில் வைத்து நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கந்த சஷ்டி திருவிழாவில் இன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்தனர்.

இந்த பக்தர்கள் கடலில் புனித நீராடிய நிலையில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம் போல் கடலில் புனித நீராடினர்.

சில பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசிப் படர்ந்த பாறைகளின் மீது ஏறி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை போலீஸார் மற்றும் கோயில் பாதுகாவலர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *