நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 486 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின்ரிசர்வ் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹென்ரி நிக்கோல்ஸ் 175 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கிளென் பிலிப்ஸ் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 52 ரன்னும், தேவ்தத் படிக்கல் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் 85 ரன் எடுத்து அவுட்டானார்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. 2வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 80 ரன்னில் வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். 3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் சுப்மன் கில் இணைந்து 91 ரன்கள் சேர்த்தார். கே.எல்.ராகுல் 136 ரன்னில் வெளியேறினார்.
4வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தனர்.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் கடைசி ஓவரில் 98 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 125 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 486 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.