தேனியில் இருந்து தப்பிய கைதிகள் 3 பேர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்!!

ஆண்டிபட்டி:
தேனியில் இருந்து தப்பிய 17 கைதிகளும் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடிபட்டனர். இந்நிலையில், அவர்களை மாநிலத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, 3 பேர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு அங்கிருந்த போலீஸாரை தாக்கி 17 பேர் தப்பியோடினர். இதில் முதற்கட்டமாக பிரவீன்குமார் என்பவர் சிறைக்கு அருகே பிடிபட்டார்.

இதனைத் தொடர்ந்து சிலம்பரசன், ராஜாசிக்கந்தர், ராஜ்குமார், மாற்றுத்திறனாளி கைதியான பிரசாந்த் என்ற லிங்கபிரசாத் உட்பட மொத்தம் 5பேர் 27-ம் தேதி பிடிபட்டனர்.

பின்பு வனப்பகுதியில் மறைந்திருந்த கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்துஇளங்கோவன், கார்த்திக்ராஜா, சோலைமுகிலேஸ்வரன் ஆகிய 8 பேர் அன்று மாலையே ட்ரோன் தேடுதலில் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் இரண்டு கட்டமாக அடுத்தடுத்த நாட்களில் ஆண்டிபட்டி, தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்முத்து, ரெஜின் ஆகியோரை 28-ம் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அன்று மாலையில் மீதம் இருந்த திருப்பதி, மீனாட்சி சுந்தரம் (இருவரும் சகோதரர்கள்) ஆகியோரை கூடலூர் அருகே போலீஸார் கைது செய்தனர்.

தப்பிச் சென்ற அனைவரும் பிடிபட்ட நிலையில், இவர்களை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியது.

இதன்படி பிடிபட்ட கைதிகளில் லிங்கபிரசாத், ராஜ்குமார், பிரவீன்குமார் ஆகியோரை இன்று காலை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றுவதற்காக உத்தரவிடப்பட்டது.இதே போல் பிடிபட்ட மற்ற கைதிகளும் தமிழகத்தின் பல்வேறு சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தப்பியது தொடர்பாக தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கூறுகையில், சில கைதிகளின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக, சிறையில் கைதிகள் கூடி பேசியுள்ளனர்.

அப்போது மாற்றுத்திறனாளி கைதியான லிங்கபிரசாத் கொடுத்த யோசனையின்படியே 17 பேரும் தப்பியுள்ளனர். இருப்பினும் 36 மணி நேரத்திலேயே போலீஸாரின் தேடுதல் வேட்டையில் இவர்கள் சிக்கியுள்ளனர் என்றார்.

அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியதால் சிறைச்சாலையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு பணி போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *