“உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின்!!

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில், “உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக, இவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் ஆதிகைலாஷிலிருந்து 18 கி.மீ.தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ஒரு ஆசிரமப் பகுதியில் 30 பேரும் தங்கினர்.

நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டதால், கடந்த 6 நாட்களாக அங்கிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி உள்ளிட்டவை இல்லாததால், 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சிதம்பரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் வசந்தா தம்பதியினர், தனது மகன் ராஜனை நேற்று செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

தகவலறிந்த மாநில வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், உத்தராகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்புகொண்டு ராணுவம் மூலம் சிதம்பரத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களை மீட்க நட வடிக்கை மேற்கொண்டார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கேட்டபோது ஆதிகைலாஷ் பகுதியில் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ளது தொடர்பாக, உத்தராகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசினேன்.

சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்ற 30 பேரும் பாதுகாப்பாக அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (செப்.15) வானிலையைப் பொருத்து அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *