மூன்று குளங்களில் புனித நீராடினால் எம பயம் நீங்குமா?

திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றான திருவெண்காடு வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயிலில், தமிழ் மாதமான பங்குனி மாதப் பிறப்பை முன்னிட்டு இன்று சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சமயக் குரவர்களால் பாடப்பட்ட திருத்தலம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற பெருமைக்குரியது இந்த சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி வடகரைத் தலங்களில் 11-வது சிவத்தலமாக இது போற்றப்படுகிறது.

காசிக்கு இணையான ஆறு சிவத்தலங்களில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ள இத்தலம், இந்திரன் மற்றும் வெள்ளை யானை வழிபட்ட இடமாகவும், புதனுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மூன்று தீர்த்தங்கள்; முக்தி தரும் வழிபாடு


இக்கோயிலின் தனிச்சிறப்பாக தீர்த்தம், தல விருட்சம் என அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளன.

இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மேலும், அகோரமூர்த்தி மற்றும் ஆதி நடராஜர் ஆகியோருக்குத் தனிச் சன்னதிகள் இங்கு உண்டு.

இங்குள்ள மூன்று முக்கிய தீர்த்தங்களான,

  • சூரிய தீர்த்தம்
  • சந்திர தீர்த்தம்
  • அக்னி தீர்த்தம்

ஆகியவற்றில் புனித நீராடி வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரரை வழிபட்டால், ஞானம் பெருகும், புத்திர பாக்கியம் கிட்டும் மற்றும் எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற இடமாகவும், மெய்கண்டார் அவதரித்த தலமாகவும் விளங்கும் இது ‘ஆதி சிதம்பரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மருத்துவாசூரனும் நந்தி பகவானும்: புராண வரலாறு


இத்தலத்தின் நந்தி பகவான் சிலையில் இன்றும் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுவது ஒரு அதிசய நிகழ்வாகும். புராண வரலாற்றின் படி, மருத்துவாசூரன் என்ற அசுரன் சிவபெருமானிடம் பெற்ற சூலாயுதத்தைக் கொண்டு தேவர்களையும், நந்தி பகவானையும் தாக்கினான். அந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட வடுக்களே நந்தி சிலையின் மீது இன்றும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

பங்குனி மாதச் சிறப்பு தீர்த்தவாரி


ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் குறிப்பிட்ட அமாவாசை தினங்களில் இங்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று பங்குனி மாதப் பிறப்பை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருளினர்.

அஸ்திர தேவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பின் மூன்று தீர்த்தக் குளங்களிலும் அஸ்திர தேவர் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த வைபவத்தைத் திருவெண்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தீர்த்தவாரி பூஜைகளை ராமநாதன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் முறைப்படி செய்து வைத்தனர்.

தமிழில் மாதம் பங்குனி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இக்கோயில் பிரசித்தி பெற்ற இந்திர விழா நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *