“என்னுடைய தாயின் விருப்பத்தை நிறைவு செய்வதற்குத்தான் இப்போது திருமணம் செய்து கொண்டேன்” – பாஜக முன்னாள் தலைவர்!!

மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலிப் கோஷ், தனது 60-வது வயதில் கட்சி நிர்வாகி ரிங்கு மஜும்தாரை (51) மணந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் திலிப் கோஷ் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி 2 பூங்கொத்துகளுடன் வாழ்த்து மடலை அனுப்பி இருந்தார்.

பாரம்பரிய பெங்காலி திருமண உடையை அணிந்திருந்த திலீப் கோஷ், திருமண சடங்குகளைத் தொடர்ந்து தனது மனைவியுடன் ஊடகவியலாளர்கள் முன் தோன்றி மக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

அப்போது திலிப் கோஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்னுடைய தாயின் விருப்பத்தை நிறைவு செய்வதற்குத்தான் இப்போது திருமணம் செய்து கொண்டேன். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுக்கு நன்றி.

எனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது அரசியல் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றார்.

அறுபது வயதான திலிப் கோஷுக்கு இது முதல் திருமணம் என்றாலும், மஜும்தாருக்கு இது 2-வது திருமணம் ஆகும். அவருக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ளார்.

நகைச்சுவையாக பேசுவதில் பெயர் பெற்ற திலீப் கோஷ், தனது இளமைப் பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார், மேலும் 2015-ல் மேற்கு வங்க பாஜக தலைவராவதற்கு முன்பு பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இவர் மாநில தலைவராக பதவி வகித்தபோதுதான், இடதுசாரிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக எதிர்க்கட்சியாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *