பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது – ஆளுநர் மாளிகை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்!!

சென்னை:
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்தி வருகிறார்.

இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்று வந்தனர்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவும் அதில் ஒன்றாகும்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறி 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து, துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடத்தினார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாநாட்டில் பங்கேற்குமாறு மாநிலத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு இன்னமும் ஆளுநர் வசம் உள்ளதா அல்லது முதல்வர் கைக்கு மாறிவிட்டதா என்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது.

இதனால், இந்த கூட்டத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ரவி பங்கேற்பாரா என்பன உட்பட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *