“எஸ்ஐஆர் வந்த பிறகு தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது ” – திமுக எம்பி ஆ.ராசா !!

சென்னை:
“எஸ்ஐஆர் வந்த பிறகு தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது.” என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் நடைபெற்ற திமுக பயிற்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட திமுக எம்பி ஆ.ராசா கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வராக பெயர் பெற்றுள்ளார். அவர் அறிமுகப்படுத்தி வரும் பல திட்டங்களை பிற மாநிலங்களும் மாதிரியாக கொண்டு செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

தேர்தல் ஆணையம், ஆணையாளர்கள் ஒழுங்காக இருந்தார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர் வந்த பிறகு நாம் ஒழுங்காக இருக்கின்றோம். தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது.

முன்பு தேர்தல் அறிவித்ததற்கு பிறகு தேர்தல் களம் சூடு பிடிக்கும். ஏன் என்றால் தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் இல்லை. தேர்தல் ஆணையம் திருடவில்லை.

ஆனால் இன்றைக்கு யார் நியாயமாக இருக்க வேண்டுமோ அங்கே திருடர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்ளுக்கு தலைமை தாங்குவது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

நாம் இவர்களிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றோம். தேர்தல் ஆணையத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளது.

மத்திய அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என எதுவும் செய்யவில்லை .

மாறாக முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் சலுகைகள் செய்து வருகிறது. நீட் தேர்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் 15 சதவீத அகில இந்திய இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடமில்லாத வகையில் அமைந்துள்ளது.

2026-ம் ஆண்டில் நடைபெறுவது சாதாரண சட்டப்பேரவை தேர்தல் அல்ல. அது இந்தியாவை, இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

இந்தியாவில் 2 பண்பாடுகள் உள்ளன. ஒன்று சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரியப் பண்பாடு; அதற்கென இலக்கியமும் மொழிவளமும் இருக்கின்றன. அதை மறுப்பதற்கு இடமில்லை.

மற்றொன்று தமிழை அடிப்படையாகக் கொண்ட திராவிடப் பண்பாடு. ஆணும் பெண்ணும் படித்தால்தான் அழகு என திராவிடம் சொல்லியது.

அதற்கு எதிரான எண்ணங்களை ஆரியம் முன்வைத்தது. ஆனால் , இன்றைக்கு எல்லாவற்றையும் ஒரே பண்பாடு, ஒரே தேசம் எனக் கலந்து, நமக்கான தனித்துவமான பெருமை இல்லாத நிலையை உருவாக்க முயல்கிறார்கள். இதனை காப்பாற்றக் கூடியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

தமிழனின் அடையாளத்தை அழிக்க முயன்றால், நாம் தனித்துத் தான் நிற்போம். இதனால் தான் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின், டெல்லிக்கு தமிழகம் ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ என கூறுகிறார்.

அவரின் பொறுப்புகளை இந்தத் தேர்தலில் நாம் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *