ஜார்க்கண்டில் கார் டயரில் மறைத்து ரூ.50லட்சம் கடத்தல் !! அதிகாரிகள் பறிமுதல்…

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஓட்டுக்கு பணப்படுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிஹத் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் – பிஹார் எல்லையில் வருமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்ததில், அந்த வாகனத்தில் உபரியாக இருந்த டயரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டயரை கிழித்து அந்தப் பணக்கட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். 11 கட்டுகளில் மொத்தம் ரூ.50லட்சம் இருந்துள்ளது.

இந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளனர்.

டயரிலிருந்து பணம் எடுக்கப்படும் வீடியோவை எக்ஸ் தளத்தில்பகிர்ந்த ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மக்களவைத் தொகுதி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, “ஊழலையும் பெரும் பணக் குவியலையும் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *