கோவை
மக்களவைத் தேர்தலைப் போல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு ஜீரோ இடங்களே கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆருடம் சொல்லி இருக்கிறார்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அனுமதி மறுத்த மத்திய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன் பின்னர், முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசின் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 15 மாதங்கள் அதை கிடப்பில் வைத்துவிட்டு, தற்போது மத்திய பாஜக அரசு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி வழங்காமல் நிராகரித்துள்ளது.
அதற்கு அவர்கள் கூறும் சாக்குபோக்கு காரணங்கள் வியப்பை அளிக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான பல்வேறு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய பாஜக அரசு, தமிழ்நாட்டில் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அனுமதி தர மறுக்கின்றனர்.
அதற்கு, 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ளனர் என்ற காரணத்தை கூறுகின்றனர். கோவை மாநகரில் 16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர், 14 ஆண்டு கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி தராமல், கோவை மாவட்ட மக்களுக்கு மத்திய பாஜக அரசு துரோகம் செய்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் 5 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தரும் பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் 15 மாதங்கள் இருப்பில் வைத்து அற்பமான காரணங்களை கூறி நிராகரித்துள்ளது?
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களை வெற்றி பெற வைத்த கோவை மக்களுக்கு கூட மெட்ரோ ரயில் திட்டத்தை கொடுக்க மனமில்லாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. 3-வது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தமிழ்நாட்டில் செயல்படுத்திய சிறப்புத் திட்டம் என்ன?
தமிழ்நாடு வளர்ந்து விடக்கூடாது, தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சியடைந்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையுடன் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. தமிழில் பேசி, திருக்குறள் கூறி, வேட்டி சட்டை அணிந்து வந்தால் போதுமா?
கடந்தமக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக-வுக்கு ஜீரோ இடங்களை மக்கள் அளித்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த ஜீரோ எதிரொலிக்கும்.
பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக-வுக்கும் ஜீரோ என்ற நிலையை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.