சென்னை:
தவெக தலைவர் விஜய் சேலத்தில் டிச.4-ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தவெக-வினர் சேலம் காவல் ஆணையரிடம் நேற்று மனு அளித்தனர்.
ஆனால், கார்த்திகை தீபத் திருவிழா, பாபர் மசூதி இடிப்பு தினம் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி அனுமதி மறுத்துள்ளது மாநகர காவல்.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்.13-ம் தேதி திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
ஆனால், எதிர்பாராத விதமாக செப்.27-ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் அவரது பிரச்சாரப் பயணத்தில் பிரேக் விழுந்தது. இந்த நிலையில் டிச.4-ல்சேலத்திலிருந்து மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடர ஆயத்தமானார் விஜய்.
இதற்கு அனுமதி கோரி நேற்று சேலம் மாநரக் காவல் ஆணையரிடம் தவெக அளித்த மனுவில், டிச.4-ம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய மூன்று பகுதிகளில் ஏதேனும் ஓரிடத்தில் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி கோரியிருந்தது.
ஆனால் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகள் கார்த்திகை தீபம் என்பதாலும், டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும் குறிப்பிட்ட தேதியில் விஜய்யின் கூட்டத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க முடியாது என அனுமதி மறுத்த போலீஸார், “மாற்று தேதியை குறிப்பிட்டு மனு அளித்தால் பரிசீலிக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதனால் மீள் விஜய்யின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தவெக தொண்டர்கள் இதனால் தளர்ந்து போயிருக்கிறார்கள். என்றாலும் திட்டமிட்டபடி டிசம்பரிலேயே தனது பிரச்சாரப் பயணத்தை மீண்டும் தொடங்கிவிடுவார் விஜய் என தவெக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.