தஞ்சாவூர்/ திருவாரூர்/நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை/ காரைக்கால்:
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த மழை நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பெய்தது.
இதனால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.
இந்த மழையால் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அம்மாப்பேட்டை பகுதியில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
மாவட்டத்தில் 2 வீடுகள் இடிந்துள்ளன. 2 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக மதுக்கூரில் 136 மி.மீ. மற்றும் வெட்டிக்காடு 135, ஒரத்த நாடு 123, அய்யம்பேட்டை 111, பட்டுக்கோட்டை 103, நெய்வாசல் 97, தஞ்சாவூர் 95, குருங்குளம் 88, ஈச்சன்விடுதி 79, திருவிடைமருதூர் 75, திருவையாறு 72, அணைக்கரை 71, பூதலூர் 64, வல்லம் 63, கும்பகோணம் 63, அதிராம்பட்டினம் 61, பேராவூரணி 60, மஞ்சளாறு 58, திருக்காட்டுப்பள்ளி 49, கல்லணை 40 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்தது.
மேலும், மாவட்டம் முழுவதும் 10,000 ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக திருத்துறைப் பூண்டியில் 110 மி.மீ. மற்றும் நீடாமங்கலம் 102.40, மன்னார்குடி 90, நன்னிலம் 84 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீர் சூழ்ந்தது.
நாகையில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பால்பண்ணைச்சேரி, என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பயிர்கள் கடந்த 3 நாட்களாக நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக தலைஞாயிறில் 99.40 மி.மீ. மற்றும் திருக்குவளை 96.20, வேளாங்கண்ணி 83.40, நாகை 83.20, திருப்பூண்டி 76.30, வேதாரண்யம் 65.20, கோடியக்கரை 60.40 மி.மீ. என மழை பதிவாகியிருந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டது.
கடல் சீற்றம், பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 400 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கரைப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 1.68 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள நிலையில், 19,000 ஏக்கர் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று மதியம் 2.30 மணி வரை அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 104.80 மற்றும் சீர்காழி 104, மணல்மேடு 63.80, செம்பனார் கோவில் 59.60, மயிலாடுதுறை 54.20, கொள்ளிடம் 104.80, தரங்கம்பாடி 17.30 மி.மீ. என மழை பதிவாகியிருந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால், மீன்பிடி துறைமுக பகுதியிலும், கடற்கரையோரங்களிலும் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்து, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காரைக்காலில் நேற்று காலை 6.30 மணி வரை 64.7 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.