அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சித்தேரி ஊராட்சி கலசப்பாடி காட்டாற்றில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் காரணமாக, 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைப் பகுதியில் உள்ள 9 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது சித்தேரி ஊராட்சி.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வளவு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, அக்கரை காடு, நைனா வளவு, கிணத்து வளவு ஆகிய 9 கிராமங்கள் அமைந்துள்ளன.
சுமார் 3,500 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் இதுவரை சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்கள் தங்களது மருத்துவம், கல்வி, அத்தி யாவசிய தேவைகளுக்காக மலைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காட்டுவழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தில் இருந்து செல்ல வேண்டியுள்ளது.
இப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு ரூ.12.70 கோடி மதிப்பில் தார் சாலை மற்றும் நலங்குபாறை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவும் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தற்போது மலைப்பகுதியில் தார் சாலைப்பணிகள் முடிவுற்ற நிலையில், நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் அருவிப்போல தண்ணீர் கொட்டுகிறது.
கடந்த 6 மாத காலமாக வறண்டு இருந்த பல்வேறு சிற்றோடைகளிலும், காட்டாறுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.
நலங்கு பாறை காட்டாற்றிலும் கடந்த 3 நாட்களாக மழை வெள்ளம் ஓடுகிறது. இதனால் மலைக் கிராம மக்கள் சமவெளி பகுதிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றின் நடுவே கயிறு கட்டி அதனை பிடித்தவாறு ஒரு சிலர் கடக்க முயன்றனர். ஆனால் அது ஆபத்தில் முடியும் வாய்ப்புள்ளதால் முயற்சி கைவிடப்பட்டது.
தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் வெள்ளநீர் வடியாத நிலையில் தரைப்பகுதியோடு தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஓடும் ஆற்றை கடந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழலும், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமலும் 9 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, காட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் பகுதியில் மழை: அரூர் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை பரவலாக சாரல் மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.
நேற்று அதிக பட்சமாகபே. தாதம்பட்டி, பெரியப்பட்டியில் தலா 22 மி.மீ., நவலை 21 மி.மீ., பையர் நத்தம் 18 மி.மீ., சிட்லிங் 15 மி.மீ. மழை பெய்தது. தொடர்ந்து மந்தமான தட்பவெப்ப நிலை காரணமாக கடும் குளிர் வீசி வருகிறது.