டாக்கா:
மகளிர் உலகக் கோப்பை கபடி தொடர் வங்கதேசத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெற்று வந்தது. 11 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணி நேற்று சீன தைபேவுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதிவில், “கபடி உலகக் கோப்பையை வென்று தேசத்தைப் பெருமைப்படுத்திய நமது இந்திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் சிறந்த மன உறுதி, திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்களின் வெற்றி எண்ணற்ற இளைஞர்களை கபடியில் ஈடுபடவும், பெரியகனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஊக்குவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.