சென்னை:
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, அண்மையில் பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடுவை விதித்தார்.
அதிமுகவிலிருந்து ஏற்கெனவே பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பசும்பொன்னில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த நிலையில், இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார்.
பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.