இலங்கையில் டிட்வா விட்டுச் சென்ற பேரழிவுத் தடங்கள்! 300 பேர் பலி; 400+ மாயம்!!

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது. அந்நாட்டின் பெரும் பகுதியைச் சூறையாடிய இந்தப் புயலின் கோரத் தாண்டவம், மிகப் பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாகத் தீவிரமடைந்து புயலாக வலுப்பெற்றது. இது நவம்பர் இறுதியில் இலங்கையை நோக்கி நகர்ந்ததால், அங்கு பல பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது.

தொடக்கத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணங்களான மட்டக்களப்பு, திருகோணமலை ஆகியவற்றைத் தாக்கிய டிட்வா புயல், பின்னர் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தது. மாத்தளை போன்ற பகுதிகளில் 56 செ.மீ. வரை மழை பதிவானது.

இந்த பெருமழை காரணமாக, நாட்டின் பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக கெலனி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் கொழும்​பு​வின் வடக்கு பகுதி முழு​வதும் வெள்​ளத்​தால் சூழப்​பட்​டுள்​ளது.

தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இன்னொருபுறம் நிலச்சரிவுகளாலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பதுளை, கேகாலை உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவுகளில் பல கிராமங்கள் முழுமையாகப் புதையுண்டு போயுள்ளன.

இந்த பேரழிவை சமாளிக்க இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி டிட்வா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 1,275 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகள் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளன.

புயல் இலங்கை கடற்பரப்பிலிருந்து விலகி, தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்தாலும், இலங்கையின் பல மாவட்டங்கள் இன்னும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன.

24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை, ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை மீட்கும் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் இருப்பதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ​​அடுத்த மூன்று நாட்களில் வெள்ள நீர் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்​கை​யில் மீட்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக ஆபரேஷன் ‘சாகர் பந்​து’ என்ற பெயரில் நிவாரணப் பணி​களை மேற்​கொள்​வதற்​காக சேட்​டக் ஹெலி​காப்​டர்​கள் ஐஎன்​எஸ் விக்​ராந்த் கப்பலில் இருந்து அனுப்பி வைக்​கப்​பட்​டன.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை இந்திய விமானப் படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தியர்கள் திருவனந்தபுரம் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த இலங்கையில், இந்த டிட்வா புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *