தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக வந்தே மாதரம் திகழ்ந்தது – பிரதமர் மோடி!!

புதுடெல்லி,
இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார்.

1870-களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார். இது 1905-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது.

இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார்.

அவரது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு இருந்தது.இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம் இன்று நடைபெற்றது.

“தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம்” என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டு இருக்கும் இந்த விவாதத்தை பிரதமர் மோடி இன்று மக்களவையில் தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும்.

வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. வந்தே மாதரம் இயற்றப்பட்ட போது நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது.

நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம். வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திர போராட்டத்தால் நாம் இன்றும் சுதந்திரமாக அமர்ந்து இருக்கிறோம்.

2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக்க வந்தே மாதரம் நம்மை ஊக்குவிகும்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி கூட்டணி என்றெல்லாம் இல்லை. தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக வந்தே மாதரம் திகழ்ந்தது” இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *