மசினகுடி:
முதுமலை அருகேயுள்ள மாவனல்லாவில் பெண்ணைக் கொன்ற ஆண் புலி வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி வனக்கோட்டம் மாவனல்லா பகுதியில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் (60) என்பவரை புலி தாக்கிக் கொன்றது.
இதையடுத்து, புலியைப் பிடிக்க வனத் துறையினர் 3 இடங்களில் கூண்டு வைத்து, கண்காணித்து வந்தனர். இந்நிலையில், புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில் கடந்த 3-ம் தேதி சிறுத்தை சிக்கியது.
வன ஊழியர்கள் அதே பகுதியில் அதை விடுவித்தனர். கடந்த 8-ம் தேதி மாவனல்லா பகுதியில் கன்றுக் குட்டியை புலி தாக்கி இழுத்துச் சென்று கொன்றது. மேலும், செம்மனத்தம் சாலையை ஒட்டிய பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்க முயற்சித்தது.
அதைப் பார்த்து மக்கள் கூச்சலிட்டதால், புலி அங்கிருந்து தப்பி ஓடியது. மாடு சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத் துறையினர், புலியைப் பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைத்தனர்.
மேலும், பழங்குடியின பெண்ணைத் தாக்கிய புலியை, அதன் உடல் வரிகளைக் கொண்டு அடையாளம் காணும் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மாவனல்லா பகுதியில் அமைத்திருந்த கூண்டுக்குள் நேற்று அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி ஒன்று சிக்கியிருப்பதை வனத் துறையினர் உறுதி செய்தனர்.
இந்நிலையில், சிக்கியது ஆட்கொல்லி புலிதானா என்று வனத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்டைத் திறன் இழப்பால் கால்நடைகளையும், பழங்குடி பெண்ணையும் இந்தப் புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் வனத் துறையினர், அதன் உடல்நிலை, வயது போன்றவை குறித்து பரிசோதனை செய்தனர்.
வனப் பகுதிக்குள் வேட்டையாடும் உடல் திறனை அந்த புலி இழந்திருப்பதை உறுதி செய்ததால், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிப்பதற்காக புலியை கொண்டு சென்றனர்.