விருதுநகர்:
பறை இசை பற்றிய கல்வியை பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில், பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
அப்போது வேலு ஆசான் உடன் இணைந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பறை இசைத்தார். அதைத்தொடர்ந்து பாரதி பறை பண்பாட்டு மையத்தை ஆளுநர் ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “சங்க இலக்கியங்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரம்பரிய இசை போற்றப்பட்டுள்ளது. பறை இசை அதன் சிறப்பு குறையாமல் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு பறை இசையை கற்றுக் கொடுத்து இதை மேலும் வளர்க்க வேண்டும்.
ஆளுநர் மாளிகையில் அரங்கேற்றம் செய்ய நான் அழைப்பு விடுக்கிறேன். பள்ளி பாடத்திட்டத்தில் பறை இசை பற்றிய கல்வி கொண்டுவரப்பட வேண்டும். பறை இசை குறித்து முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2047ல் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். அப்போது நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டை கொண்டாடும். அப்போது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உலகம் முழுவதும் பறை ஓசை கேட்க வேண்டும். இதை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தமிழக ஆளுநரை வரவேற்றார். கலை மாமணி விருது பெற்ற நாதஸ்வர கலைஞர் அய்யாவு பூரண கும்பம் அளித்து ஆளுநர் ரவியை வரவேற்றார்.