தீபம் ஏற்றுவது ஒரு ஆன்மிக அறிவியல்….. இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை.!! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை விவரிப்பு!!

திருப்பரங்குன்றம்;

முருக பக்தர்கள், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சார்பில் தீபமேற்றும் போராட்டம் மற்றும் இவ்விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதியை நீக்கக்கோரி முதல் கையெழுத்திட்ட காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 120 எம்.பிக்கள் மக்களவையில் கையெழுத்து போட்டுள்ளனர். இந்து சொந்தங்கள் மீதுள்ள கோபத்தை அந்த கையெழுத்தின் மூலம் வெளிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை.

திருப்பரங்குன்றத்தில் இருக்கும் பிரச்சினை ஆங்கிலேயர்கள் காலத்தில் 1920-ல் உருவாக்கப்பட்ட பிரச்சினை.

சுதந்திரத்துக்குப் பிறகு வேவ்வேறு கால கட்டத்தில் வேண்டும் என்றே வழக்கை போடுவார்கள். ஆனால் கடந்த டிச. 1-ம் தேதி வந்த தீர்ப்பு முற்றிலும் வேறுபட்ட தீர்ப்பு. மலையின் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது இந்து மக்களின் கோரிக்கை.

‘மலையின் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. அங்கு தர்க்கா இருக்கிறது. மலை உச்சியில் இருந்து 50 மீட்டர் கீழே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்’ என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தீபத்தூணில் தீபம் ஏற்ற உரிமை இருக்கிறது. ஆனால், மக்களை குழப்புவதற்காக அரசியல் கட்சியினர் உண்மையை திரித்து பேசி வருகின்றனர். இந்து வாழ்வியல் முறை ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. இதனை யாரும் தோற்றுவிக்கவில்லை.

இஸ்லாம், கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பே குன்றில் தீபம் ஏற்றுவது என்பது நம்முடைய வழக்கம். தீபம் ஏற்றுவது ஒரு ஆன்மிக அறிவியல். இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

‘அது தீபத்தூண் இல்லை. ஆங்கிலேயர்களின் சர்வே ஸ்டோன்’ என்று திமுக சொல்கிறது. இப்போது புதிதாக, ‘அது சர்வே ஸ்டோன் அல்ல சமணர்களின் ஸ்டோன்’ என்று கூறுகின்றனர். நாள்தோறும் ஒரு பொய்யை சொல்லி உளறுகின்றனர்.

அடிப்படையில் திமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்து கையெழுத்திட்ட எம்.பிக்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள். குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு, வாழ்வியல் முறைக்கு அவர்கள் அடிப்படை துரோகிகள். இந்து மதத்தின் வாழ்வியல் முறையை அழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள்.

கோயிலுக்கு சென்று வழிபடுவதில் பிரச்சினை, முருகன் மலைக்கு பிரச்சினை, முருகனுக்கே பிரச்சினை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு பிரச்சினை, ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை; இப்படி எல்லாவற்றையும் தடை செய்யும் அரசுக்கு எப்படி நாம் வாக்கு போடுகிறோம் என்ற அடிப்படை கேள்வியை ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டும்.

நாம் எப்படி பிறந்தோம் என்பதற்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது, எதற்காக அந்தக் கட்சிக்கு வாக்கு போட வேண்டும் ? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவியில் இருந்து இறக்கக் கூடாது, கையெழுத்து போட்ட எம்.பிக்களை பதவியில் இருந்து இறக்க வேண்டும். இவர்கள் யாருக்குமே மன்னிப்பு கிடையாது. புதுச்சேரி எம்.பிக்கும் மன்னிப்பு இல்லை. தமிழக அரசை 2026-ல் வீட்டுக்கு அனுப்புங்கள்.

இந்து சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். அரசியலில் மாற்றம் வரவில்லை என்றால் இந்தக் கூட்டம் போடுவதே வீண். வாக்குப் பெட்டியில் முருகனுக்காக நாம் நின்றால் மட்டுமே, நீதிபதி வழங்கிய தீர்ப்பு நிரந்தரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2026 தேர்தலில் புதுச்சேரி, தமிழகத்தில் வாக்களிப்பதற்கு முன்பு அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விஜய்க்கு கண்டனம்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,”100 நாள் வேலை திட்டம் வந்தபோதே காந்தியின் பெயரை காங்கிரஸ் வைக்கவில்லை.

அப்படி வைக்காமல் தற்போது கபட நாடகம் போடக்கூடாது. 2016-க்கு பிறகு காந்தியின் பெயரை நாங்கள் பல இடத்தில் வைத்துள்ளோம். அதற்கான பட்டியல் எங்களிடம் இருக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரத் தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடக்கின்றன. நான் பேச மாட்டேன், வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் தவெகதலைவர் விஜய்யைநம்பி மக்கள் எப்படி ஆட்சிபொறுப்பை கொடுப்பார்கள்? தவறு எது சரி எது என்பதை கூற வேண்டும். விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும்.

பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மையின அமைச்சருக்கு இலாகா கொடுக்கவில்லை என்று புதுச்சேரியில் பேசிய தவெக தலைவர் விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெரும்பான்மை மக்களுக்காக ஏன் பேசவில்லை?

தற்போது இருக்கும் நடைமுறையை மாற்றியதற்காக சபரிமலை தீர்ப்பை எதிர்த்தோம். இருக்கும் நடைமுறையை பின்பற்றவே திருப்பரங்குன்றம் தீர்ப்பை ஆதரித்தோம்.

இதை விமர்சிக்கும் திருமாவளவன் தீர்ப்பு நகலை படிக்க வேண்டும். தீர்ப்புகள் தவறாக சொல்லப்படும் போது எதிர்க்கிறோம். சரியாக வரும்போது ஆதரிக் கிறோம்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *