சென்னை:
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் சென்னை விமான நிலையம் அருகில் ஓர் ஏக்கரில், ரூ.39.20 கோடியில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 3-ல் நாகையில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்.
ரூ.39.20 கோடியில்.. அதற்கிணங்க, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் விமானம் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னர் தமிழக ஹஜ் குழு அலுவலகத்தை அணுகி, பயண நடைமுறைகளை நிறைவேற்றி விமான நிலையத்துக்கு செல்வதற்கு ஏதுவாக, சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஓர் ஏக்கர் பரப்பில், ரூ.39.20 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய ஹஜ் இல்லம் அடித்தளம் உட்பட 4 தளங்களுடன் கட்டப்பட உள்ளது. விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன். எஸ். எம்.நாசர், மாநில ஹஜ் கமிட்டித் தலைவர் அப்துல் சமது, நவாஸ் கனி எம்.பி., ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.