புதுடெல்லி:
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நீக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த (எஸ்ஐஆர்) பணி நடைபெறுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாடுகள் மீதும், நம்பகத்தன்மை மீதும் யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள், இறந்தவர்களின் பெயர்கள் போன்றவற்றை எஸ்ஐஆர் மூலம் நீக்கி வருகிறது.
1952 முதலே எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேரு பிரதமராக இருந்த போது 1952, 1957, 1961-ம் ஆண்டுகளில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன.
லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது 1965-லும், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1983-லும், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1987, 1989 ஆகிய ஆண்டுகளிலும், பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1992-லும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன.
2002-ல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலும், 2004-ல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்திலும் இந்தப் பணி நடைபெற்றது. எனவே, இது புதிய விஷயமல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் தேர்தல் ஆணையம் இதை நடத்தி வருகிறது.
ஆனால், இது சட்டத்துக்கு புறம்பான விஷயம் என்பதுபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.