பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்!!

அடிஸ் அபாபா,

எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார்.

அவருக்கு அடிஸ் அபாபா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று காரில் ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.

பின்னர் பிரதமர் மோடியும், எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன.

நம்முடைய இரு நாடுகளின் ஒத்துழைப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்றவற்றின் முக்கிய அம்சங்களில் விரிவாக கலந்து ஆலோசனை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம்.

இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று மோடி கூறினார்.

பின்னர், பிரதமர் மோடிக்கு ‘எதியோப்பியான் தி கிரேட் ஹானர் நிஷான்’ என்ற உயரிய விருது வழங்கி அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி கவுரவித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே ஆவார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.

விருது பெற்ற பிறகு மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிக உயரிய விருதான – எத்தியோப்பியாவின் தி கிரேட் ஹானர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான நாகரிகத்தால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது.

அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். உங்கள் அனைவருடனும், இந்த மாபெரும் எத்தியோப்பியா நாட்டில் இருப்பது எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம். நான் எத்தியோப்பி யாவுக்கு வந்தவுடன், இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும், பாசத்தையும் வழங்கினர். பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எத்தியோப்பியாவின் கவுரவ விருதைப் பெற்றதில் பெருமை கொள்கிறேன். அதை 140 கோடி இந்திய மக்களுக்கும் அர்ப்பணிக் கிறேன் என்று பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேச்சு

எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:–

இந்திய மக்களின் சார்பாக, உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது.

நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாகும்.

இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டும் நமது நிலத்தை தாய் என்று குறிப்பிடுகின்றன. அவை பாரம்பரியம், கலாசாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ள நம்மைத் தூண்டுகின்றன. இந்திய நிறுவனங்கள் இன்று எத்தியோப் பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இந்தியாவிற்கு, எத்தியோப்பியாவிற்கு இடையே வலுவான உறவுகள் உள்ளது. இங்கே மக்களின் விருப்பம் அரசின் விருப்பமாக மாறுகிறது. அரசின் விருப்பம் மக்களின் விருப்பத்துடன் இணக்கமாக இருக்கும் போது, திட்டங்களின் பலன் எளிதில் சென்று அடைகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *