3 வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள்- நாளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!!

திருவனந்தபுரம்:
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தனது வளர்ச்சியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்காக அந்த கட்சியின் தலைவர்கள் தமிழகம் மற்றும் கேரளத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் வளர்ச்சியாக கேரளாவில் பாரதிய ஜனதா முதன் முறையாக எம்.பி. தேர்தலில் ஒரு இடத்தை கைப்பற்றியது.

திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ்கோபி, தற்போது மத்திய மந்திரியாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் பெற பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில், கட்சியின் முக்கிய தலைவர்கள் கேரளாவை குறிவைத்து வருகின்றனர்.

சமீபத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கேரள மாநிலம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (23-ந்தேதி) கேரளா வருகிறார். மாநில தலைநகர் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கும் அவர், புதிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

நாகர்கோவில்-மங்களூர், திருவனந்தபுரம்- தாம்பரம், திருவனந்தபுரம் -ஐதராபாத் வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்- திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து அவர், புதுமை, தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை பகல் அவர் திருவனந்தபுரம் வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து அவர் ‘ரோடு ஷோ’வாக விழா நடைபெற புத்திரிக்கண்டம் மைதானத்திற்கு காரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

புத்திரிக்கண்டம் திடலில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்சியினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் மூலம், கேரள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை பாரதிய ஜனதா தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அவரது விமானம் வரும் சங்குமுகம் விமான நிலையம் மற்றும் புத்திரிக்கண்டம் கிழக்கு கோட்டை பகுதிகள் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் டிரோன்கள், டிரோன் கேமராக்கள், பறக்கும் பட்டங்கள், பலூன்கள் மற்றும் லேசர் கற்றை விளக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *